முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிரு௦ப்பை ஆக்கிரமிக்க முயன்ற சிறிலங்கப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்தி தாக்குதலில் 3 பீரங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான படையினர் பலியாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற சிறிலங்க அரசு அறிவித்த 48 மணி நேரக் கெடு நேற்று நள்ளிரவுடன் முடிந்ததை அடுத்து, சிறிலங்கப் படையினர் பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என்றும், இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்குத் தயாராக இருந்த சிறிலங்காவின் 59ஆவது டிவிசன் படையினரின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று காலை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன், 3 பீரங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட் தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.