தங்களுக்கு எதிரான இனப் படுகொலையை யார் செய்கிறார்களோ அவர்களின் கைகளில் தமிழ் மக்கள் தங்களின் விதியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு ஐ.நா. அமைதியாக உதவுகிறது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம்சாற்றியுள்ளார்.
சிறிலங்க அரசின் மீது தனது சர்வதேச அதிகாரத்தையும், பொறுப்பையும் செலுத்தாத ஐ.நா., வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாகத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, தங்களுக்கு எதிரான இனப் படுகொலையை யார் செய்கிறார்களோ அவர்களின் கைகளில் அம்மக்கள் தங்களின் விதியை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் எந்தவொரு நியாயமும், மனிதாபிமான அடிப்படைகளும் இல்லை என்றார் அவர்.
"சிறிலங்க அரசை மனித உரிமைகளை மதிக்கச் செய்வதில் ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் இதுவரை தோல்வியையே சந்தித்துள்ளன. இந்நிலையில் தற்போது, மகிந்த ராஜபக்சவின் நம்பத்தகுதியில்லாத உறுதிமொழியைத் தவிர, மக்களின் பாதுகாப்பிற்கும் கெளரவத்திற்கும் அவர்கள் என்ன உத்தரவாதத்தை தந்துள்ளார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நெட் இணையத்தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறுகையில், "வன்னிப் பகுதி மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அவர்களது உயிர் பயத்திற்கு இடையில் அவர்களைப் பிடித்து வைக்க சிறிலங்க அரசு முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. மேலும், தமிழர்களை வெல்வதற்காக மட்டுமே இத்தகைய செயலில் சிறிலங்க அரசு ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திலும் கூட நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்றும், உடல் ஊனப்படுத்தியும் சிறிலங்க அரசு வேண்டுமென்றே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. அதாவது, இதனைச் செய்வதன் மூலம் மக்களின் உணர்வுகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வேறு வழியற்ற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
இனப்படுகொலை செய்யும் சிறிலங்க அரசு தாங்கள் பிடித்துச் செல்லும் அப்பாவி மக்களை சுரண்டலுக்கு ஆட்படுத்தி, இராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போக்குகளை ஐ.நா.வும் சர்வதேசச் சமூகமும் கவனிக்க வேண்டும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அடிப்படையற்ற குற்றச்சாற்றைக் காட்டிலும் மோசமானதாகப் பார்க்கப்பட வேண்டும்.
போரின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குத்தான் சென்றார்களே தவிர சிறிலங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஒருபோதும் செல்லவில்லை. பொது மக்களின் இயல்பான நடமாட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கின்றனர் என்று குற்றம்சாற்றுபவர்கள் இந்த உண்மையை ஏன் காண்பதில்லை. விடுதலைப் புலிகள் பொது மக்களை துரத்த வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
கிழக்கு மாகாணத்தில் நடப்பதைப்போல பொதுமக்கள் ஏன் தங்களைப் பிடித்துக் கண்காணிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஒருசிலர் வாதிடுகின்றனர். ஆனால், அனைவருக்கும் தெரியும், கிழக்கில் இருந்து புலிகள் வெளியேறிவிட்டார்கள் என்று. வன்னியிலோ நிலைமையே வேறு. மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறுபவர்கள், விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மக்கள் அவர்களுடன் இருப்பதையே விரும்புகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐ.நா.வும் சில வல்லரசுகளும் போரை நிறுத்த விரும்பவில்லை. மாறாக ஆதிக்கக் கொழும்புவின் அழுத்தத்திற்கு தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். மேலும் அவர்கள், தமிழ் மக்களை தங்களுக்குக் கீழ் கொண்டுவரும் சிறிலங்க அரசின் உடனடி நோக்கத்திற்குச் சாதகமாக மக்களே கொழும்புவின் பக்கம் செல்ல வேண்டும் என்று நயவஞ்சகமாக ஒத்தூதுகின்றனர்.
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் மற்றும் அவரது தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் ஐ.நா. தலைமைச் செயலகத்தில் பசில் ராஜபக்சவை சந்தித்தது, ஐ.நா. பொதுச் செயலரின் டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களுடனான விவாதங்கள் ஆகியவற்றால் விளைந்ததே இந்தச் சூழ்நிலை" என்று குற்றம்சாற்றினார்.