உலகின் மிக ஆபத்தான நாடாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது என அமெரிக்காவின் முன்னாள் அயலுறவு அமைச்சர் மடேலின் அல்பிரைட் கூறியுள்ளார்.
அயலுறவு விவகாரங்களுக்கான குழுவின் சார்பில் வாஷிங்டனில் நேற்று நடந்த ‘முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு’ என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மடேலின், அணு ஆயுதம், தீவிரவாதம், பஞ்சம், ஊழல் என அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கிய பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக விளங்கி வருகிறது என்றார்.
அன்றாட வாழ்வில் உலகின் மிக ஆபத்தான நாடு எது என்ற எண்ணம் மனதில் தோன்றும். என்னைப் பொறுத்தவரை அந்த மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என்று மடேலின் கூறினார்.
எனினும், அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டினார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடர்பான விவகாரங்களில் அவரது ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் மடேலின் தெரிவித்துள்ளார்.