இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மக்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாகக் கூறியுள்ளது.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் உட், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஐ.நா.வின் மூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இலங்கையின் தற்போதைய நிலை சோகம் அளிக்கிறது. குறிப்பாக சில ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எங்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றார்.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகாலமாக நடந்து வரும் போர் ஏதாவதொரு தருணத்தில் முடிவுக்கு வரும் என்று தாங்கள் நம்புவதாகவும், அப்போதுதான் இலங்கை மக்கள் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் வளமானதொரு வாழ்க்கை அமைப்பது குறித்து சிந்திக்க முடியும் என்றும் ராபர்ட் உட் குறிப்பிட்டுள்ளார்.