அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தலைமையிலான அரசின் அயலுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் செயல்படும் ஜுடீஷியல் வாட்ச் என்ற அமைப்பு, அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தில் தூதராகப் பணியாற்றும் டேவிட் சி.ரோடியர்மெல் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஹிலாரி கிளிண்டனை அயலுறவு அமைச்சராக நியமித்தது அரசியல் சட்டப்படி செல்லாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜுடீஷியல் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூதர் டேவிட் ரோடியர்மெல்லை ஹிலாரிக்கு கீழ் பணியாற்றும்படி நியமிக்க முடியாது என்றும், அப்படி நியமித்தால் அது கடந்த 1991இல் அயலுறவு சேவை ஊழியராக டேவிட் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அரசியல் சட்டப்படி எந்த அமைச்சர் பதவிக்கான சம்பளம் விகிதம் மாற்றப்பட்டாலும் அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினராக இருக்கும் யாரும், அந்த சம்பள உயர்வு நடைமுறையில் இருக்கும் காலம் வரை அரசின் நிர்வாகப் பதவிக்கு நியமிக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஹிலாரி மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் அயலுறவு அமைச்சருக்கான ஊதியம் 3 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2007 ஜனவரி 4ஆம் தேதி முதல் 2013 ஜனவரி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், அயலுறவுச் செயலராக ஹிலாரியை நியமித்தது சட்டப்படி செல்லாது என அந்த மனுவில் விளக்கப்பட்டுள்ளது.