வடக்கு இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியிருக்கும் 2.5 லட்சம் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி ஐ.நா மனித அமைப்பு பிரிவு கவலை தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தூதர் நவி பிள்ளே, கடும் மழை-வெள்ளம், இடம்பெயர்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ள மக்கள் மீது தொடர் ராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனக் கூறினார்.
போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் சிறிலங்க அரசுக்கு நேரடியாக கவலை தெரிவித்த நிலையில், அதே கருத்தை தற்போது ஐ.நா மனித உரிமை அமைப்பின் தூதர் நவி பிள்ளேயும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள ஐ.நா மற்றும் பல்வேறு தன்னார்வ அரசுசாரா குழுக்கள் உதவியுடன் கடந்த நவம்பர் வரை 5 ஆயிரம் பேர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.