வன்னியில் இந்த வாரம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கப் படையினருக்கு உதவிபுரிந்தபோது காயமடைந்த இந்திய இராணுவ வல்லுநர்கள் 4 பேர் கொழும்புவில் சிகிச்சைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது.
இந்தச் செய்தி முதலில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த குலோபல் தமிழ் விசன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகவும், இந்தியப் படையினர் 4 பேரும் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நெட் கூறுகிறது.
இதையடுத்து கொழும்பில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்தச் செய்தியை இன்று (வெள்ளிக்கிழமை) தாங்கள் உறுதிப்படுத்தியாகவும், தகவல் அறியும் உரிமைக்கு சிறிலங்க அரசினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்தியப் படையினர் பற்றிய மேல் விவரங்களை அறிய முடியவில்லை என்றும் தமிழ்நெட் கூறுகிறது.
சிகிச்சைபெற்று வரும் இந்தியப் படையினர் களத்தில் சிறிலங்கப் படையினருக்குத் தேவையான சிறப்பு உதவிகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து சிறிலங்காவிற்கு இராணுவ பீரங்கிகளும் படையினரும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, அதை எதிர்த்துத் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியப் படையினர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கப் படையினரின் வன்னித் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில், சிறிலங்க விமானப் படையில் பணியாற்றிய இரண்டு இந்திய ராடார் இயக்குநர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.