இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் எந்தவித ரகசியமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவது பற்றி விவாதிக்க அவர் இலங்கை வந்தார் என்றும் சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிரிபாலா டிசில்வா, இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்திற்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றது.
இப்பயணம் சாதாரணமானதுதான். குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதில் எதுவும் இல்லை என விளக்கினார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அளித்து வரும் ஆதரவை தெரிவிக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுவதற்காகவும் பிரணாப் இலங்கை வந்தார் என்றும் சிரிபாலா கூறினார்.
மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் தாம் இந்தியாவில் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், இத்தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை வேரறுக்க இந்திய அரசியல்வாதிகள் உறுதிபூண்டதையும் குறிப்பிட்டார்.
தமிழீழம் கோரும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கப் படையினர் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் விடுத்த ஒருமித்த வேண்டுகோளை ஏற்று கடந்த செவ்வாயன்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றார்.
அந்நாட்டின் அதிபர் ராஜபக்சவை சந்தித்த பிரணாப் முகர்ஜி, பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என வலியுறுத்தியதாகவும், அதனை அதிபர் ராஜபக்ச ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.