மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களின் மீது பாகிஸ்தான் இதுவரை நடத்திய புலனாய்வு குறித்த முதற்கட்ட அறிக்கை இன்னும் 3 நாளுக்குள் வெளியிடப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்து வரும் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு கண்டறிந்தவை பற்றிக் குறிப்பிடாமல், இதுதொடர்பான முதற்கட்ட அறிக்கை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார்.
ஆதாரத்தின் மீது புலனாய்வு செய்து வரும் குழு தனது பணியை முடிக்க கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்வதால், பாகிஸ்தான் மேற்கொண்ட புலனாய்வு பற்றிய முதற்கட்ட அறிக்கையை வெளியிடுவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டான் நியூஸ் தொலைக்காட்சியில் நேற்று வெளியான செய்தியில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி இந்தியா வழங்கிய ஆதாரத்தின் மீது ஆய்வு நடத்திய குழு, மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்படவில்லை என அரசு வட்டாரத் தகவல்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வழங்கிய தகவல்களின் மீது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளிலும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாலிக், இந்தியா வழங்கிய ஆதாரங்களின் மீது இன்னும் 10 நாளில் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார். அந்தக் காலக்கெடு 27ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த 3 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
ஆனால் இன்று மேலும் 3 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று மீண்டும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.