இலங்கையில் வாழும் தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்து வரும் சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தால் வாழ்விடங்களில் இருந்து அகதிகளாக்கப்பட்டு, படுகொலைக்கு உள்ளாகும் இலங்கைத் தமிழ் உறவுகளின் அவலக்குரலை வெளிக்கொண்டு வரும் வகையில் ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி வாழ் பல்கலைக்கழக இளைஞர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
சிறிலங்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலையை நிறுத்த ஆஸ்ட்ரேலிய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் அமைந்திருக்கும் மாட்டின் பிளே பகுதியில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு, ஆஸ்ட்ரேலியா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சிட்னி வாழ் இளைஞர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.