இலங்கையின் வடக்கு பகுதியில் போர் நடக்கும் இடங்களில் காயமடைந்த தமிழர்களை அங்கிருந்து மீட்கும் பணியில் இன்று ஐ.நா. ஈடுபட உள்ளது.
காயமடைந்தவர்களை மீட்டுச் செல்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அனுமதி அளித்தால், தங்களின் குழு போர் நடைபெறும் பகுதிக்குள் இன்று பகல் நேரத்தில் நுழைந்து 50 குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த மக்களை மீட்கும் என ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மீட்கப்படுபவர்கள் வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களை போர் நடக்கும் பகுதியில் இருந்து மீட்பதற்காக சென்ற ஐ.நா மீட்புக் குழு புதுக்குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. இப்பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்க அரசுக்கு, விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போர் நடக்கும் இலங்கையின் வடக்குப் பகுதியில் 2.5 லட்சம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே சிறிலங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், யுத்தம் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள 2.5 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற இரு தரப்பினரும் உடனடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.