பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹால் புரூக் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட மாட்டார் என அமெரிக்கா தெளிவுபடக் கூறியுள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட்டிடம், ரிச்சர்ட் ஹால் புரூக்கிடம் வழங்கப்பட்ட பொறுப்புகளில் காஷ்மீர் பிரச்சனை ஏன் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ராபர்ட் உட், காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா தெளிவான நிலையில் உள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தானை எப்படி பேச்சுவார்த்தை மூலம் அணுக வேண்டும், அந்நாட்டிடம் இருந்து எதனைப் பெற வேண்டும் என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளது. எனவே, காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உதவியுடன் ஆஃப்கானிஸ்தானில் நிலையை சீராக்குவது, இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பது ஆகிய விடயங்களில் மட்டுமே ரிச்சர்ட் ஹால் புரூக் கவனம் செலுத்துவார். அதுவே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும் என்வும் ராபர்ட் வுட் தெளிவுபடுத்தினார்.