இலங்கையின் வன்னிப் பகுதியில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த தமிழர்கள் மீது பீரங்கி, எறிகணைத் தாக்குதல் நடத்தி ஒரே நாளில் 300க்கும் அதிகமானோரைக் படுகொலை செய்த சிறிலங்க அரசு, படையை கண்டித்து பிரான்ஸில் உள்ள தமிழர்கள் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரான்சின் அயல்நாட்டு அமைச்சகம் அமைந்துள்ள பகுதி மற்றும் தமிழர்களின் வணிக மையமான லாச்சப்பல் ஆகிய பகுதிகளில் தன்னெழுச்சியாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிக்காட்டும் வகையில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
பிரான்சின் அயல்நாட்டு அமைச்சகம் அமைந்துள்ள இன்வேலிட் (Invalid) பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூடினர். இதனையறிந்த அந்நாட்டு காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, அவர்களை அப்பகுதியில் இருந்து விலகிச் செல்லுமாறு வலியுறுத்தினர்.
அதன் பின்னரும் குறிப்பிட்ட நேரம் வரை தங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய தமிழர்கள் இதையடுத்து தமிழர்கள் அதிகம் கூடும் பாரீசின் லாச்சப்பல் பகுதியிலும் ஒன்று திரண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்துக் குரல் எழுப்பினர்.
மக்களின் உணர்வெழுச்சிக்கு ஆதரவளித்து வணிக நிலையத்தில் இருந்த கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் கதவுகளை அடைத்தனர். இதன் காரணமாக மக்களின் உணர்வுக் கொந்தளிப்பு வீதி மறியல் போராட்டமாக உருவெடுத்தது. சுமார் 4 மணிநேரம் லாச்சப்பல் பகுதியின் பிரதான வீதியில் அமர்ந்து தமிழர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.