சிறிலங்கப் படையினரின் தொடர் எறிகணை, வான்வழித் தாக்குதல்களால் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ஏராளமானவர்களில் இளைஞர்கள், பெண்களை குறிவைத்து கடத்தும் அந்நாட்டுப் புலனாய்வுத்துறை அவர்களை கொலை செய்து வருவதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து புலிகள் ஆதரவு இணையதளமான புதினத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று அரசு அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களையும், பெண்களையும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் விசாரணை என்ற பெயரில் ரகசிய முகாம்களுக்கு கடத்திச் செல்கின்றனர்.
பின்னர், பெண்களை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்து அவர்கள் உடல்களை அடையாளம் தெரியாத வகையில் எரியூட்டுவதாகவும், இளைஞர்களை பல சித்திரவதை செய்து கொன்று அவர்கள் உடல்களை புதைத்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பகுதிகள் போன்ற இடங்களிலேயே கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதுடன், பெண்களின் உடல்கள் எரிக்கப்படுகிறது என இதனை நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில் உள்ள செய்தியாளர்கள் சிலரிடம் கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் இதுபோல் 25 இளைஞர்கள், 27 பெண்கள் என மொத்தம் 52 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது நிலை உள்ளது.
அப்படி இருந்தும் சில குற்றச்சாற்றுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல முடியாதவாறு படையினர் தடைவிதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.