இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவை எதிரியாகக் கருதத் தேவையில்லை என அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு முதன் முறையாக பேட்டியளித்துள்ள ஒபாமா, எனது குடும்பத்திலும் முஸ்லிம் மக்கள் உள்ளனர்; முஸ்லிம் நாடுகளில் நான் வசித்துள்ளேன். அந்த வகையில் உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா எதிரியல்ல என்று உணர்த்துவதே எனது பணி எனக் கூறியுள்ளார்.
உலகில் உள்ள அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு பொதுவாக நாங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்து என்னவெனில், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் கருதி புதியதொரு நட்புறவை உங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையிலான போரில் அமெரிக்கா உத்தரவிடுவதைத் தவிர்த்து, அங்குள்ள நிலையை ஆராய்ந்து அதனை தீர்க்க முயற்சிக்கும் என ஒபாமா கூறினார்.
அல்-கய்டா தலைவர்களான ஒசாமா பின்லேடன், ஜவஹரி ஆகியோரின் சித்தாந்தங்கள் காலவதியாகி விட்டதாகவும், அவர்கள் நிதிப்பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதாகவும் குறிப்பிட்ட ஒபாமா, முஸ்லிம் நாட்டில் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கும், அவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதற்கும் அவர்கள்தான் (அல்-கய்டா) காரணம் என இனியும் கூறுவதில் அர்த்தமில்லை என்றார்.