இலங்கையில் சிறிலங்க இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்துவரும் போருக்கிடையில் முல்லைத் தீவுப் பகுதியில் சிக்கியுள்ள இரண்டரை இலட்சம் தமிழர்களுக்கு உடனடி நிவாரணம் அனுப்பப்படும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
ஐ.நா.வும் மற்ற மனிதாபிமான அமைப்புகளும் அனுப்பும் நிவாரண உதவிகள் பாதிக்கப்ப்பட்ட மக்களை சென்றடைய சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் உதவிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அலுவலகப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தீவிரமடைந்துவரும் போரால் மிகப் பெரிய மனிதாபிமான சிக்கல் எழுந்துள்ளது என்று பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்ட ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரின் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்துள்ள மக்களை பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களின்படி பாதுகாத்து, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இராணுவமும், விடுதலைப் புலிகளும் அனுமதி அளிக்க வேண்டும் என்று நேற்று வேண்டுகோள் விடுத்தபான் கீ மூன், “அப்பாவி மக்கள், மனிதாபிமான பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் இரு தரப்பினரும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாவி மக்கள் வாழும் அல்லது தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மனிதாபிமான வசதிகளை தாக்குவதில்லை என்று கட்டுப்பாட்டை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
போரின் காரணமாக தங்கள் வாழ்விடங்களில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வன்னிப் பகுதியில்பாதுகாப்பான தங்குமிடங்களை உருவாக்குவதற்கான நெறிமுறைகளை அகதிகள் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் தூதர் பிறப்பித்து வருவதாகவும், அவர்களுக்கு உதவிட நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து உரிமத்தை வழங்கவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் முழுச் சுதந்திரத்துடன் புழங்கவும் அனுமதித்திட வேண்டும் என்று இலங்கைக்கான ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் சிறிலங்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இம்மாதம் 16ஆம் தேதிவரை 519 வாகனங்களில் 8,000 டன் அளவிற்கு உணவும், அது தவிர குடி நீர், பள்ளிக்கூட தேவைகள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதியம், ஐ.நா.வின் மனித உரிமை பேரவை ஆகியவற்றின் வாயிலாகவும் அளிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.