இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையுமாறு தமிழகத் தலைவர்கள் வன்னிக்குப் போய்த் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெயலலிதா ஆகியோர் வன்னி பகுதிக்கு சென்று மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோர வேண்டும். பொதுமக்களை ஆயுதமுனையில் பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வரும் புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று இணை இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மகிந்த கூறியிருப்பதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் தெரிவிப்பதாக புதினம் இணையத்தளம் தெரிவிக்கிறது.
கருணாநிதி போர் நிறுத்தத்தை ஏற்படுத்த விரும்புவாரானால் அவர் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு புலிகளிடம் பகிரங்கமாக கோரவேண்டும். சிறிலங்கா அரசும் கருணாநிதியும் முன்மொழியும் ஒரு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையில் அதனைச் செய்ய முடியும்.
கருணாநிதி சிறிலங்கா வரும்போது அவரோடு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களைக் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழுவையும் கூட தன்னோடு கூட்டிவர முடியும். அப்பாவி தமிழ் மக்களை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் புலிகளிடம் அவர்களை விடுவிக்குமாறு கோர வேண்டும்.
இலங்கையில் நடக்கும் உண்மையான நிலவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிழையான வழிநடத்தல்களுக்கு தமிழகத் தலைவர்கள் உட்பட வேண்டாம் என்று மகிந்த கூறியுள்ளார்.