சிறிலங்கா அரசே அறிவித்த பாதுகாப்பு வளையங்களில் பல நூறு அப்பாவி மக்களை மனிதாபிமானம் இல்லாமல் படுகொலை செய்து இருப்பது மிகப்பெரிய போர்க்குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அவர் நேற்று (திங்கள்) அளித்த நேர்காணலில்,
தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தவில்லை. ஆனால், இனப்படுகொலை செய்யும் சிறிலங்கப் படையினரிடம் இருந்து தப்பி தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கியே அவர்கள் வருகின்றனர்.
வன்னி நிலைமைகளைப் புரிந்துகொள்ள ஐ.நா.வும், சர்வதேசச் சமூகமும் தவறிவிட்டன.
சிறிலங்கா அரசு அறிவித்திருக்கும் பாதுகாப்பு வளையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்தப் பாதுகாப்பு வளையங்களை ஐக்கிய நாடுகள் அவையோ, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமோ நம்பவும் இல்லை.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
எனவே சர்வதேசச் சமூகம் போரை உடனே நிறுத்தி பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.