"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாங்கள் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம்சாற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
"எங்களின் மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாங்கள் வைத்திருக்கிறோம் என்று சொல்வது முழுக்க முழுக்கப் பொய். எங்களின் மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசு இதைச் சொல்கின்றது" என்று பா.நடேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது கூறும் குற்றச்சாற்றுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது, "எங்கள் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாற்றாகும். எங்கள் பாதுகாப்பில் வாழ்வதை விரும்பித்தான் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எங்களுடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால்தான் தெரியும்" என்ற அவர்,
"இத்தகைய குற்றச்சாற்றுக்களை கூறும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா என்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "எங்களின் தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எங்களின் போராட்ட இயக்கமும் எங்கள் மக்களுடனேயே இருந்து போராடுகிறோம்" என்றார் அவர்.
பெரும் இராணுவப் பின்னடைவைக் கண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கம் ஏன் ஒரு அரசியல் தீர்வைப் பெறக்கூடாது என்பது தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எங்களது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாங்கள் போராடியே தீருவோம்" என்று நடேசன் தெரிவித்துள்ளார்.