இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்க அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலுக்கு 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு- சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு-உடையார்கட்டு, வல்லிபுனம் ஆகிய பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி அப்பாவித் தமிழர்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயம் மீது படையினர் கடுமையான பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு-சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு-உடையார்கட்டு, வல்லிபுனம் ஆகிய பகுதிகளின் மீது சிறிலங்க படையினர் நேற்று (திங்கள்) நடத்திய கண்மூடித்தனமான பீரங்கி தாக்குதலில் குறைந்தது 300க்கும் உயிரிழந்திருக்கக் கூடும் என விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவித்துள்ளது.
வன்னியின் 4 மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 சிறிய கிராமங்களுக்குள் தற்போது முடக்கப்பட்டுள்ள சுமார் 4 லட்சம் தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த பீரங்கித் தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுதாகவும் புதினம் செய்தி கூறுகிறது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெரும்பாலானோர் குழந்தைகளும், சிறுவர்களும் என புதினம் செய்தியாளர் நிகழ்விடத்தில் இருந்து தெரிவிக்கிறார்.
தமிழர்கள் மீதான சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.