மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து வரும் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அமெரிக்க அரசின் சார்பில் நிதி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான உத்தரவில் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
அதிபர் புஷ் பதவிக்காலத்தின் போது சர்வதேச அளவில் செயல்படும் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிதியுதவியை ஒபாமா மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைய முடியும் என அமெரிக்க அமைப்பு ஒன்றின் செய்தித் தொடர்பாளர் டெய்ட் சய் தெரிவித்துள்ளார்.
கடந்த 1984இல் அப்போதைய அதிபர் ரொனால் ரீகன் (குடியரசுக் கட்சி) சர்வதேச அளவில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவரது ஆட்சிக்குப் பின்னர் அடுத்து வரும் ஜனநாயகக் கட்சி அரசு இந்த உத்தரவுக்கு தடை விதிப்பதும், அதன் பின்னர் பதவிக்கு வரும் குடியரசுக் கட்சி இந்த உத்தரவின் மீதான தடையை நீக்குவதுமாக இருந்த நிலையில், கடந்த 2001இல் அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ் (குடியரசுக் கட்சி) இந்த உத்தரவிற்கு தடைவிதித்தார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த திட்டத்திற்கு அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் தடைவிதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா அதிபராக பதவியேற்றுள்ளதால் ரெனால்ட் ரீகன் நடைமுறைப்படுத்திய திட்டத்தின் மீதான தடை தொடரும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிராக கருக்கலைப்பு நிதியின் மீதான தடை உத்தரவை ஒபாமா நீக்கியுள்ளார்.