வன்னி மக்கள் பாதுகாப்பாகப் போய் ஒதுங்குவதற்காக சிறிலங்க அரசு அறிவித்திருந்த "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வளையம்" பகுதியின் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விசுவமடு மயில்வாகனபுரம் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று காலை 6.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சைவக்கோவில் குரு ஒருவர் கொல்லப்பட்டதுடன், 4பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளமான புதினம் தெரிவிக்கிறது.
மூங்கிலாறில் இயங்கும் கிளிநொச்சி அரசு செயலகக் கட்டிடத்தில் நேற்று இரவு 11.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோல உடையார்கட்டு பகுதி இருட்டுமட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பில் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்கப் படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முதியவர் ஒருவர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.