தமிழின அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்காவிற்கான பொருளாதார உதவிகளை நிறுத்தக் கோரி, நார்வேயில் உள்ள ஜப்பான் தூதரகம் முன்பு நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜப்பானிய தலைமை அமைச்சருக்கு தூதரகம் வழியாக நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதில், "இலங்கையில் நடந்து வரும் போரின் விளைவாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களிலிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாழ்விடங்களில் இருந்து வன்னியின் முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு விரட்டப்பட்டுள்ளனர்.
இடைவிடாத வான் தாக்குதல்கள், ஏவுகணை, பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன், படுகாயமடைகின்றனர்.
மருத்துவமனைகள், இடம்பெயர்ந்தோர் அடைக்கலம் தேடிய தற்காலிக முகாம்கள் மீதுகூட, அனைத்துலக மனித உரிமை விழுமியங்களை கடுமையாக மீறும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
உணவு, மருந்து தடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு சிறிலங்க அரசு தடை விதித்துள்ளதால் மக்களின் வாழ்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
அங்கு ஒரு இன அழிப்பு நடக்கிறது. மற்றுமொரு ருவண்டா உருவாக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறிலங்காவிற்கான மேம்பாட்டு நிதி வழங்கும் நாடுகளின் வரிசையில் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது என்ற தகவல் எங்களை அச்சுறுத்துகிறது.
இந்த நிதியானது சிறிலங்க அரசு நடத்தும் போருக்கு பயன்படுத்தப்படுவதுடன், இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளது.
எனவே, சிறிலங்காவிற்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். உடனடிப் போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதி செய்யவேண்டும். ஐ.நா. நிறுவனங்களும் மனிதநேய அமைப்புக்களும் மீண்டும் போர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு குறிப்பாக வன்னிபகுதிக்கு சென்று மனிதநேயப் பணிகளை உடனடியாக தொடருவதற்கு சிறிலங்க அரசு அனுமதிப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.