முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 2 இடங்களில் முன்னேறிய சிறிலங்கப் படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 51 படையினர் கொல்லப்பட்டனர், மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 4:30 மணிக்கு சிறிலங்கப் படையினர் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், இதில் 16 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகப் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதேநேரத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் நேற்று அதிகாலை சிறிலங்கப் படையினர் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 35 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமான படையினர் காயமடைந்துள்ளதாகவும் புதினம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலின்போது படையினருக்கு உதவியாக எம்ஐ- 24 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. காயமடைந்த, பலியான படையினரை ஹெலிகாப்டர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தியுள்ளன.
மேற்கண்ட இரண்டு தாக்குதல்களிலும், படையினர் போட்டுவிட்டு ஓடிய ஆயுதங்களையும், கொல்லப்பட்ட படையினரின் சடலங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.