அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் பரிந்துரைத்துள்ள, சட்டபூர்வ குடியேற்றங்களை அதிகரிப்பதற்குச் சாதகமான குடியேற்றக் கொள்கை, அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு வரமாக அமையும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்கவாழ் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சட்டபூர்வமாகக் குடியேறியவர்கள்தான் என்று அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமெரிக்க நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை பற்றிய வெள்ளை மாளிகை ஆவணத்தில், "குடும்பங்களை ஒன்று சேர்ப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றிற்காக, செயலிழந்துள்ள குடியேற்றத்துறை அதிகாரிகளைச் செயல்படவைத்தல் மற்றும் சட்டபூர்வக் குடியேற்றங்களை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "அரசியலை தள்ளிவைப்பதன் மூலம் மட்டுமே நமது உடைந்துள்ள குடியேற்ற முறையைச் சரிசெய்ய முடியும், நமது எல்லைகளைப் பாதுகாக்கும் சிக்கலிற்கு முழுமையான தீர்வைத் தர முடியும், நமது சட்டங்களை அமலாக்க முடியும் மற்றும் குடியேறியவர்களின் நாடு என்ற நமது பெருமையை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்" என்று ஒபாமா கூறியுள்ளார்.
ஆவணங்கள் இல்லாத குடியேற்றக்காரர்களை ஒப்பந்தப் பணிகளில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளவர்களின் வருமானங்கள் நீக்கப்படும் என்றும் அந்த ஆவணம் உறுதியளித்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாக ஆவணங்கள் இல்லாமல் வேலை நிமித்தமாகக் குடியேறியுள்ளவர்கள் முறைப்படி ஆங்கிலம் கற்றுக்கொண்டு, தரக் கோட்பாடுகளைப் பூர்த்தி செய்தால், அவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக மாறுவதற்கு வாய்ப்பளிக்கும் முறையை ஒபாமா நிர்வாகம் ஆதரிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.