தமிழின அழிப்பைத் தீவிரமாக்கும் வகையில், சிங்கள அரசு தற்போது மருத்துவச் சேவைகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.
வன்னியில் நிலவும் மருத்துவ நெருக்கடி நிலை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையில்,
"வன்னியில் வாழும் தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களைக் குறிவைத்து எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிற காரணத்தால், நாளுக்கு நாள் தமிழ் மக்கள் சாவினை எதிர்கொண்டே வாழ்ந்து வருகின்றனர். இடம்பெயர்ந்து அல்லற்படும் மக்களும் இத்தாக்குதல்களுக்கு விதி விலக்கில்லை.
தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று நாளுக்கு நாள் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற அரசு அவர்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இத்தாக்குதல்கள் மூலம் காயப்படுகின்ற மக்கள் உயிர் பிழைக்கக்கூடாது என்ற நோக்கோடு மருந்துத் தடை, நோயாளர்களை மேல் சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்ல அனுமதிக்காதது உள்ளிட்டட்ட கொடுஞ் செயல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களில் 65 பேர் மேல் சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக இந்நிலை தொடர்கிறது.
இதே மருத்துவமனையில் தாக்குதல்கள் மூலம் காயமடைந்த 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 41 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பென்சிலின், மயக்க மருந்து இல்லை
தசை அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் பென்சிலின் வகை மருந்து இல்லை. இதனால் நோயாளிகள் தங்களின் உறுப்புக்களை இழந்தும், வீணாக உயிரிழந்தும் வருகின்றனர்.
மயக்க மருந்தும் (KATAMINE) இல்லை. இதனால் ஏற்கனவே வலியுடன் உள்ள நோயாளிகள் மயக்கமடையாமலேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மருந்து கட்டப் பயன்படுத்தப்படுகின்ற பன்டேஜ், பஞ்சு (பஞ்சணை) உள்ளிட்ட பொருட்கள் இன்மை, படுக்கை வசதியின்மை போன்ற நெருக்கடி நிலைகளும் காணப்படுகின்றன.
இந்த மருத்துவமனையில் படுகாயம், சிறுகாயம் உள்ளிட்ட நோய்களுடன் 450க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 150 கட்டில்களே மருத்துவமனையில் உள்ளதால் நோயாளிகள் தரையிலேயே படுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
இந்த மருத்துவமனை போன்று இடம்பெயர்ந்து இயங்குகிற வன்னியின் பெரிய மருத்துவமனைகளான கிளிநொச்சி பொது மருத்துவமனை, முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் ஏனைய பிரதேச மருத்துவமனைகளும் பல்வேறு நெருக்கடிகளுடன் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் உலகிலேயே உயிர்காக்கும் உன்னத பணியான மருத்துவப் பணியினை இன அழிப்பிற்காகப் பயன்படுத்தும் அரசின் பயங்கரவாதச் செயலை சர்வதேசச் சமூகம் உற்று நோக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.