இலங்கையில் தமிழர்கள் வாழும் வன்னிப் பகுதியில் சிறிலங்க ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில், 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்திற்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விடுதலைப்புலிகளை பிடிப்பதாகக் கூறி தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது சிறிலங்க ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
வன்னியின் சுதந்திரபுரம் சந்தியில் உள்ள பிள்ளையார் கோயிலின் பின்புறத்தில் வசித்து வந்த பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சிறிலங்க படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஈடுபட்டதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இப்பகுதியில் 6 எறிகணைகளை சிறிலங்க ராணுவம் வீசியதாகவும், இத்தாகுதலில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அந்த இணையதள செய்தி தெரிவிக்கிறது. மேலும் 51 அப்பாவிகள் காயமடைந்துள்ளனர்.