அமெரிக்காவின் 44 வது அதிபராக பராக் ஒபாமா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இந்த பதவி ஏற்பு விழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்றார். புதிய அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்கும் விழா தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்தது.
கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்பதால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாஷிங்டனில் குவிந்தனர். இதனால் வாஷிங்டன் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிக்கு (அமெரிக்க நேரப்படி பகல் 11 மணி) பதவி ஏற்பு விழா தொடங்கியது. துணை அதிபர் ஜோபிடன் முதலில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து, அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் வில்லியம்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை ஒபாமாவின் மனைவி மிஷெல் கையில் ஏந்தியபடி நின்றிருக்க, அந்த பைபிள் மீது தனது வலது கையை வைத்தபடி ஒபாமா பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பதவியேற்றதும் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் குறித்து ஒபாமா சிறப்புரை ஆற்றினார். பாராளுமன்றத்துக்குள் சென்றதும் முதல் பணியாக, அமெரிக்க மந்திரிகள் நியமன சான்றிதழ்களில் ஒபாமா கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் புஷ் விடை பெற்றார். அவரை அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் ஜோ பிடனும் வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகு, நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தனது மனைவி மிஷெல், மகள்கள் மாலியா, சாஷா ஆகியோரும் சென்றனர்.