Publish Date: Tue, 20 Jan 2009 (17:03 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (17:03 IST)
அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ், 2 நாள் பயணமான பாகிஸ்தான் வந்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்கும் தினத்தன்று டேவிட் பெட்ரேயஸ் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். அல்-கய்டா, தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடத்தப்படும் என ஒபாமா அறிவித்திருந்த நிலையில், பெரேயஸின் இந்தப் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் பெட்ரேயஸ், தற்போது 2வது முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தளபதி பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்துப் பேச பெட்ரேயஸ் திட்டமிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகியவை மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, அந்நாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையை நிறுவுவது உள்ளிட்டவை பற்றியும் பெட்ரேயஸ் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி அத்துமீறி ராக்கெட் தாக்குதல் நடத்தும் விவகாரம் குறித்து அப்போது பாகிஸ்தான் தரப்பில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (17:03 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (17:03 IST)