இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்கரான நீல் குமார் கத்யாலை அமெரிக்காவின் துணை தலைமை வழக்கறிஞராக பராக் ஒபாமா நியமித்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டு நீதித்துறையின் 2வது இடத்திற்கு நீல் குமார் கத்யால் உயர்த்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் மிக உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து யேல் சட்டப்பள்ளியில் நீல் கத்யாலுடன் பயின்ற சுபோத் சந்த்ரா என்பவர் கூறுகையில், அமெரிக்க துணை தலைமை வழக்கறிஞராக கத்யால் நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
நீதியின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, அவருடைய அறிவுக்கூர்மை, நகைச்சுவைத் திறமையை கண்டு வியந்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நீதித்துறையில் அவருக்கு உள்ள அனுபவத்தை அறிந்ததால் கூறுகிறேன், துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அவர்தான் சிறந்த தேர்வு என்றார்.
கடந்த 1999-2002 வரையிலான காலகட்டத்தில் நியூயார்க் மாநகர நீதித்துறையின் தலைமை வழக்கறிஞராக நீல் குமார் கத்யால் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.