எல்லா அமைப்புகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது, ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு அல்ல என்று இங்கிலாந்து அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலிற்கு உள்ளான தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
அமெரிக்காவில் அல்-காய்டா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அமைப்புக்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்புக்கள் எல்லாம் பயங்கரவாத அமைப்புக்கள் என்று அமெரிக்க நிர்வாகம் முத்திரை குத்தியது. இது சரியான அணுகுமுறை அல்ல.
ஸ்பெயின் நாட்டில் பாஸ்க் அமைப்பினர் தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர். இலங்கையில் சம உரிமை மறுக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் அரசிற்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
சம உரிமை வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும். இதற்காக அறவழியில் போராடிப்பார்த்து எந்த முடிவும் ஏற்படாததால், ஆயுதப் போராட்டம் நடத்த ஒரு அமைப்பு தள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலோட்டமாகப் பார்த்து அதை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவது நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியாது. இதேபோல பல்வேறு நாடுகளில் பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றன.
ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக பயங்கரவாத அமைப்புக்கள் என்று முத்திரை குத்தினால் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது. வெவ்வேறுபட்ட அமைப்புக்களை ஒரே சொற்பதமான 'பயங்கரவாதிகள்' என்று கூறி, அவற்றை ஒற்றை இயக்கமாக எதிர்கொள்ள முற்பட்ட ஜார்ஜ் புஷ் அதில் தோல்வியடைந்துவிட்டார்.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு என்பது கவர்ச்சிகரமான வார்த்தை ஜாலமாக இருக்கலாமே தவிர, நடைமுறையில் அது சாத்தியமற்றது.
இவ்வாறு டேவிட் மிலிபாண்ட் வலியுறுத்தினார்.