அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்கிறார் பராக் ஒபாமா
, திங்கள், 19 ஜனவரி 2009 (18:30 IST)
அமெரிக்காவின் 44வது அதிபராக கருப்பர் இனத்தைத் சேர்ந்த பராக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். இதற்காக வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோர் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.
அதிபர் பதவியேற்பு விழாவைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லிங்கன் நினைவிடத்தில் நேற்றிரவு இசைக் கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பராக் ஒபாமா, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சனைகள் மிகவும் சவாலானவை. அமெரிக்கா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள அமெரிக்க மக்கள் தயாராக வேண்டும். இந்தச் சவால்களைச் சமாளிக்க ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு கூட ஆகலாம். இதில் சில பின்னடைவுகளும் ஏற்படலாம் என்றார்.அமெரிக்காவில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னை வென்றதன் மூலம் கருப்பர் இனத்தைச் சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் அதிபர் பொறுப்பை ஒபாமாவிடம், ஜார்ஜ் புஷ் ஒப்படைக்க உள்ளார். இவ்விழாவின் போது பராக் ஒபாமா அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்க உள்ளனர். நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக 15 கோடி டாலருக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.