பிரேசிலின் சா பௌஸோ (Sao Paulo) நகரில் உள்ள ஒரு பழமையான தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரீபார்ன் இன் கிறிஸ்ட் என்ற அந்த தேவாலயத்தில் நேற்று காலை சுமார் 60க்கும் அதிகமானவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது அதன் கூரை இடிந்து விழுந்ததாக தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் மர்லி கோன்க்ளெவ்ஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து சா பௌவ்லோ ஆளுநர் ஜோஸ் சீரா விபத்துக்கான தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் 7 பேர் உயிரிழந்ததாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். எனினும் தேவாலய மேற்கூரையின் நிலை பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சுமார் 2 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படும். ஆனால் நேற்று பிரார்த்தனை முடிந்த சில நிமிடங்களுக்கு பின்னர் கூரை இடிந்து விழுந்ததால், அந்த நேரத்தில் சுமார் 100க்கும் குறைவான மக்களே உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.