இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 51 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 150 படையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்தியில், தருமபுரம் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கமாண்டோ படையின் உதவியுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர். இதையடுத்து சிறிலங்கப் படையினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் படையினரின் நகர்வுகள் அனைத்தையும் விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர். இம்மோதலின் போது பீரங்கி தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இத்தாக்குதலில் 51 படையினர் கொல்லப்பட்டதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
பலியான படையினரின் உடலங்களும், ஏராளமான ஆயுதங்களும் தருமபுரம் பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.
மேலும், படையினர் வசம் இருந்த 40 மில்லிமீட்டர் குண்டு செலுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட சில நவீன ரக ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 மாதமாக நடந்து வரும் போரில் விடுதலைப்புலிகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது நேற்று முதல் முறையாகும்.