சிறிலங்காவிற்குச் சென்றுள்ள அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் இன்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வரும் கடும் மோதல்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
சிவசங்கர் மேனனின் சிறிலங்கப் பயணம் குறித்தும், இன்று காலை ரோகித போகல்லாகமவுடன் அவர் நடத்திய விவாதம் குறித்தும் ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் புதினம் இணைய தளம் கூறுகிறது.
இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகுதான் கொழும்புவிற்கு சிவசங்கர் மேனன் வந்துள்ள விடயமும், ரோகித போகல்லாகமவைச் சந்தித்த விடயமும் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுடன் சிவங்கர் மேனன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் என்றும், அது தொடர்பான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் புதினம் செய்தி கூறுகிறது.