பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மேற்கு ஆசியாவை மட்டுமின்றி உலகின் அமைதியையும் பாதிக்கும் என்பதால் அங்கு நடந்து வரும் வன்முறைகளை சர்வதேச சமூகத்தினர் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடந்த விவாதத்தின் போது பேசிய இந்தியாவுக்கான நிரந்தர துணை உறுப்பினர் அஜய் மல்ஹோத்ரா, பாலஸ்தீனத்தில் பலியான அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இரு தரப்பினரும் விரைவாக அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்கி, இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும், துன்பத்தில் உள்ள காஸா மக்களுக்கு அதுதான் உடனடித் தீர்வாக இருக்க முடியும் என்றும் அவர் அப்போது கூறினார்.
எனவே சர்வதேச சமூகத்தினர் ஒன்றாக இணைந்து அப்பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மல்ஹோத்ரா, இதற்காக ஐ.நா.வும், பொதுச் செயலர் பான்-கி-மூன் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்றார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.
தற்போது மேற்கு ஆசியாவில் உள்ள தலைவர்களை சந்தித்து வரும் பான்-கி-மூன், காஸா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வலியுறுத்த வேண்டும் என அவர்களிடம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் ராணுவ காஸாவில் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.