ஒபாமா பதவியேற்பு விழா செலவு 15 கோடி டாலர்
, வெள்ளி, 16 ஜனவரி 2009 (14:41 IST)
ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் விழாவில் அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்க உள்ளார். அந்த பதவியேற்பு விழாவுக்கு 15 கோடி டாலருக்கு மேல் செலவழிக்கப்பட்டு உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக 'தி கார்டியன்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பதவியேற்பு நிகழ்ச்சியின் போது பனிப்பொழிவு ஏற்பட்டால், நிகழ்ச்சிக்கான செலவு மேலும் அதிகரிக்கும் என்றும், இந்நிகழ்ச்சியை நேரில் காண 15 முதல் 20 கோடி மக்கள் வாஷிங்டனில் குவிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்கான அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கரோல் ப்ளொர்மென் கூறுகையில், நிகழ்ச்சியை குறைந்த செலவில் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனினும் அதிகார மாற்றத்தை அமைதியான முறையில் நடத்துகிறோம் என்பதை உலகிற்கு உணர்த்த இதுபோன்றதொரு பதவியேற்பு நிகழ்ச்சி தேவைப்படுகிறது என்றார். கடந்த 2005இல் ஜார்ஜ் புஷ் அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு 4.23 கோடி டாலரும், கடந்த 1993இல் பில் கிளிண்டன் அதிபராக பதவியேற்ற நிகழ்ச்சிக்கு 3.3 கோடி டாலரும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.