பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது புனிதப் போர் நடத்தப்படும் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-கய்டாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் எச்சரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பின்லேடன் பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக அவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்லேடனின் மிரட்டல் பேச்சுகள் அடங்கிய ஒலிநாடா இஸ்லாமிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரேலுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படும் என்று பின்லேடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடவுள் நம் பக்கம் இருக்கிறார். பாலஸ்தீன விடுதலையில் அரபு நாடுகள் சரியாக செயல்படவில்லை. அதனால்தான் காஸா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக புனித போரில் ஈடுபட வேண்டும் என பின்லேடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ள பராக் ஒபாமா இதுபற்றிக் கூறுகையில், பின்லேடனும், அல்கய்டா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் தேடப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்கள்தான் அமெரிக்காவின் முதல் எதிரிகள் என்றார்.