தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி உள்பட மூன்று இந்தியர்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்த பர்னபாஸின் மகன் தெரசியா பெர்னாண்டோ (54). இவர், கென்ய நாட்டு கப்பலில் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார்.
இதே கப்பலில் பொறியாளராக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சரவணனும், தரக்கட்டுப்பாட்டு அலுவலராக கேரளத்தைச் சேர்ந்த அந்தோனியும் இருந்தனர். இவர்களைத் தவிர கென்யா நாட்டை சேர்ந்த சிலரும் இருந்தனர்.
கடந்த 7ஆம் தேதி ஏடன் வளைகுடா பகுதியில் இவர்களுடைய கப்பல் சென்றபோது சோமாலிய கடற் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கப்பலை மடக்கினர். பெர்னாண்டோ உள்ளிட்ட 3 இந்தியர்களை மட்டும் கடத்தி சென்றனர்.
இவர்களை விடுவிக்க கப்பல் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து கப்பல் நிறுவனத்தினர் தூத்துக்குடியில் உள்ள தெரசியா பெர்னாண்டோவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்க கோரி மத்திய- மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.