சோமாலியாவின் பயங்கர வன்முறை மற்றும் பஞ்சத்திலிருந்து தப்பிக்க அந்த நாட்டு மக்கள் கென்யாவிற்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இவர்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவேற்ற ஐ.நா. 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவித்தொகையாக அளித்துள்ளது.
கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் நெரிசலான அகதிகள் முகாமில் சுமார் 2,30,000 சோமாலியர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் தேவைகளுக்காக அகதிகளுக்கான ஐ.நா. தூதுவரின் கோரிக்கையை ஏற்று மத்திய நெருக்கடி நிலை நிதியம் இந்தத் தொகையை அளித்துள்ளது.
சோமாலியா-கென்யா எல்லையில் உள்ள தாதாப் வளாகத்தில் தற்போது அகதிகள் எண்ணிக்கை அதன் உரிய அளவைக் காட்டிலும், மும்மடங்காக அதிகரித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு சுமார் 1000 பேர் அகதிகளாக சோமாலியாவிலிருந்து இங்கு வந்து சேர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியாவின் நிலைமை நாளுக்குநாள் மிகவும் மோசமடைந்து வருவதால் 2008ஆம் ஆண்டு மட்டும் சுமார் 65,000 பேர் அகதிகளாக அந்த நாட்டை விட்டு வெளியேறி கென்யாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சூடானிலிருந்தும் கென்யாவிற்கு அகதிகளாக பலர் வந்து கொண்டிருக்கும் வேளையில் இவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது கடினமான ஒன்றாக மாறி வருகிறது என்று கென்ய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..