பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான `கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.
இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
பிரிட்டன் இயக்குனர் டேனி பாயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரில் வாழும் ஏழைச் சிறுவன், குரோர்பதி போன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பணக்காரனாவதை சித்தரிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனில் கபூர், இர்பாஃன் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் குல்சார் எழுதிய 'ஜெய் ஹோ' என்ற பாடலுக்காக, ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.
இதனமூலம் இசை வரலாற்றில் ரஹ்மான் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நாடக படம் ஆகியவற்றுக்காகவும் `ஸ்லம் டாக் மில்லியனர்' கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது.
மும்பை விக்டோரிய டெர்மினஸ் ரயில் நிலையத்தின் பல பகுதிகளிலும் `ஸ்லம் டாக் மில்லியனர்' படம் எடுக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் பாலிவுட் உலகிலும் தடம்பதித்ததுடன், சர்வதேச அளவில் ஒரு விருதினைப் பெற்றிருப்பதால், இந்திய திரைப்படத்திற்கே கவுரவம் கிடைத்துள்ளது எனலாம்.
'கோல்டன் குளோப்' விருது வென்றுள்ள ரஹ்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.