மும்பையின் மீது நடந்த தாக்குதலிற்காக இத்தனை கூச்சல் போடும் உலக நாடுகள், காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலிற்கும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் ‘அக்கிரமங்களுக்கும்’ வாய் திறக்காதது ஏன் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.
கராச்சி நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி, “மும்பைத் தாக்குதல் குறித்து மட்டும் இவ்வளவு குரல் கொடுக்கும் உலக நாடுகள், அங்கு பாலஸ்தீனத்தில் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டனர். மும்பையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கிற்கு கொஞ்சமும் குறைவானதல்ல பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஆனால் அப்பிரச்சனையில் உலகம் ஏன் மெளனம் சாதிக்கிறது?” என்று கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.
“பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலுள்ள மாரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பல அயல் நாட்டவர்களும், ஒரு தூதரும் கொல்லப்பட்டனர். ஆனால் அதற்கெல்லாம் உலக நாடுகள் ஏதாவது கூச்சல் போட்டனவா? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த உலகம்?” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள கீலானி, இரட்டை அளவுகோல் இல்லாத உலகை நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.