திரிகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலிலும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும் சிறிலங்க விமானப் படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள பன்குளத்திலிருந்து மொறாவேவ நோக்கி சென்று கொண்டிருந்த சிறிலங்க விமானப் படையினரின் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 8.55 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச்சூட்டினையும் நடத்தியதாகப் புலிகள் தெரிவித்ததாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் சிறிலங்க விமானப் படையினர் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்க இராணுவ உயரதிகாரி பலி
இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கிச் செல்லும் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி சிறிலங்க இராணுவ உயரதிகாரி லெப்டினன்ட் கர்னல் நலிந்த குமாரசிங்க கொல்லப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் பலியான படையினரில் இவர்தான் மிக உயர்ந்த பதவியை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.