Publish Date: Thu, 08 Jan 2009 (16:16 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (16:09 IST)
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் 4 சிறுவர்கள் உள்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்க இராணுவத்தினரின் தொடர்ச்சியான குண்டு வீச்சின் காரணமாக வட்டக்கச்சிப் பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களின் மீது இன்று காலை சிறிலங்கப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 11 மாதக் குழந்தை உட்பட 3 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 4 சிறுவர்கள் உள்பட 15 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதேபோல தருமபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்களின் மீது இன்று பிற்பகல் 1.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.