இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காஸா மீதான தாக்குதலை உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று நிறுத்துவதா அல்லது மேலும் தீவிரப்படுத்துவதா என்பது குறித்து இஸ்ரேலியத் தலைவர்கள் இன்று விவாதிக்க உள்ளனர்.
காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காஸாவில் அகதிகள் முகாமில் செயல்பட்டு வந்த ஐ.நா பள்ளியின் மீது நேற்று இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 40 பாலஸ்தீனப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை அமெரிக்காவும் வலியுறுத்திய நிலையில், காஸா மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதா அல்லது தொடர்வதா என்று விவாதிக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.
இக்கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் யூட் ஆல்மெர்ட் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேலிய உயரதிகாரி, அக்கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது பற்றி தமக்கு இதுவரை தெரியவில்லை எனக் கூறினார்.