Publish Date: Tue, 06 Jan 2009 (21:06 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (21:05 IST)
கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் மூன்று முனைகளில் முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 41 படையினர் கொல்லப்பட்டனர், மேலும் 102 பேர் காயமடைந்தனர்.
பரந்தனில் இருந்து கிழக்காக முரசுமோட்டை நோக்கியும், பன்னங்கண்டி நோக்கியும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து இரணைமடு நோக்கியும் மூன்று முனைகளில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறிலங்க இராணுவத்தினர் முன்னேறத் துவங்கியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
எறிகணைத் தாக்குதல், கனரகப் போர்க் கருவிகளின் தாக்குதல் ஆகிய உதவியுடன் முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை, கடுமையாக எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், இன்று மாலை 5.00 மணியளவில் சிறிலங்க இராணுவத்தின் முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இந்த மோதலில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும், சிறிலங்கப் படையினர் போட்டுவிட்டு ஓடிய ஆயுதங்களும், கொல்லப்பட்டுள்ள படையினரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.