Publish Date: Tue, 06 Jan 2009 (18:25 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (18:24 IST)
மும்பை மீதான தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் அயலுறவு விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அயலுறவு இணையமைச்சர் மாலிக் அமாத்கான், செயலர் சல்மான் பஷீர் இருவரும், இந்தியா அளித்த ஆதாரங்களில் நம்பகத்தன்மை உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா நம்பகத்தன்மை உள்ள ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை எனக் கூறிய இருவரும், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் நம்பகத்தன்மை உள்ள ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு தேவை என்றனர்.
இந்தியா அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை, இதனை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கு முன்பாகவே வெளியானவை என அதிபர் சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பராஃஹ்துல்லா பாபர் கூறியிருந்த நிலையில் பஷீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட விதமும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், அதி நவீன கருவிகளும், கராச்சியில் இருந்து கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்து ஒரு இராணுவ நடவடிக்கை போல இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே, இது பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்டதுதான் என்பதற்கு சான்றாகிறது என்று கூறியுள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கிடையான பதற்ற சூழலை பிரதமர் மன்மோகன் சிங் அதிகரித்துள்ளதாகவும் பஷீர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ ரீதியான நடவடிக்கை மேற்கொண்டால் அது மாபெரும் தவறாகி விடும் என்று குறிப்பிட்ட பஷீர், மும்பை தாக்குதலை காரணம் காட்டி இந்தியாதான் போர் பீதியை அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
சர்வதேச நாடுகளிடம் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் இந்தியா முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய பஷீர், இதனை பாகிஸ்தான் முறியடித்ததுடன் உலகிற்கு தம்முடையை நிலை பற்றி வெளிப்படுத்தி வருகிறது என்றார்.
Webdunia
Publish Date: Tue, 06 Jan 2009 (18:25 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (18:24 IST)