Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் தனியார் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்

Advertiesment
இலங்கையில் தனியார் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:16 IST)
இலங்கையில் தனியார் தொலைக்காட்சி அலுவலகம் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா பேசுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவில்லை. தாக்குதலுக்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், 12 பேருக்கும் அதிகமான கும்பல் கொழும்பில் உள்ள மஹாராஜா குழுமத்தின் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்தது.

அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்தவர்களிடம் ஒளிபரப்பு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை காட்டுமாறு மிரட்டிய அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், அப்பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தொடர்ந்து கையெறி குண்டுகளையும் வீசியதால், ஒளிபரப்புக் கருவிகள் சேதமடைந்தன.

இத்தாக்குதலில் ஏராளமான தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் காயமடைந்தாலும், ஒருவர் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என சிரஸா தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குனர் சுஷில் கின்டல்பிட்டியா தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த இந்த தொலைக்காட்சி நிறுவனம், சமீபத்தில் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய செய்தியை வெளியிடவில்லை எனக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், தொலைக்காட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் அனுரா யபா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil