மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள், இதுதொடர்பாக இந்தியா வழங்கியுள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லாததால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி நேஷன்’ நாளிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து இந்தியா திங்களன்று அளித்த தகவல்கள் போதவில்லை என்பதால் அவ்விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமெரிக்க அயலுறவு உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தரப்பின் விளக்கத்தை அமைச்சர் பௌச்சரிடம் யார் கூறினார்கள் என்பது பற்றியும், இந்தியா வழங்கிய ஆதாரம் எந்த வகையில் போதுமானதாக இல்லை என்பது குறித்த தகவல்கள் அச்செய்தியில் இடம்பெறவில்லை.
மும்பையின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வு குறித்து ஆராயவும், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கவும் அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் நேற்று பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோரை பௌச்சர் சந்தித்துப் பேசினார். இப்பேச்சுகளின் போது இந்தியா தகுந்த ஆதாரங்கள் அளித்தால், மும்பை தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அனைவரும் பௌச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா அளித்த ஆதாரத்திற்கு இன்னும் ஓரிரு நாளில் பதிலளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல்வேறு புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அறிக்கை தயாரிக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளதாகவும் ‘தி நேஷன்’ நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.