அமெரிக்காவில் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் முதன்னை புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ., 850 சிறப்பு ஏஜென்டுகள், 2,100 தொழில்முறைப் பணியாளர்களை புதிதாகச் சேர்க்க உள்ளது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்.பி.ஐ.) துணை இயக்குனர் ஜான் ரௌச்சி, எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு எஃப்.பி.ஐ.யில் வழங்கப்படும் பணி சன்மானம்மிக்கதாக இருக்கும். அவர்கள் மேற்கொள்ளும் பணி நாட்டின் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தும் விதத்தில் இருக்கும் என்றார்.
மேலும், பல்வேறு துறைகளில் தொழில்முறை பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளோம். பயங்கரவாதிகள், ஒற்றர்கள் மற்றும் தீங்கு விளைவிக்க நினைப்பவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க விரும்புவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ரௌச்சி கூறியுள்ளார்.
ஹிந்தி, பஞ்சாபி, உருது உள்ளிட்ட முக்கிய சர்வதேச மொழிகள் தெரிந்த 850 சிறப்பு ஏஜென்டுகளையும், 2,100 தொழில்முறை உதவிப் பணியாளர்களையும் புதிதாக சேர்க்க உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.